கவிதையில் கரு வேண்டும் சிலர்க்கு!
புலன்கள் கொணர்ந்தவை
எண்ணங்களுடன் புணர வேண்டுமே அதற்கு!
எதையேனும் சொல்லவேணும் சிலர்க்கு!
நான்கு பக்கங்களில்
நச்சென கட்டுரை எழுதிவிடலாமே அதற்கு!
எதுகை மோனைகள் கலந்து விளையாட வேண்டும் சிலர்க்கு!
என்னை அன்னை வெம்மை ரம்பை
என்பதற்கு அர்த்தம் தேடாமல் இருக்க வேண்டுமே அதற்கு!
பல வாசிப்பு கடந்தும் புரியவே கூடாது சிலர்க்கு
முதல் வாசிப்பிலேயே மனதை வருட வேண்டும் சிலர்க்கு!
ஐய்யபாட்டு கொள்கை பற்றி
ஐந்து பத்தி போதுமே அதற்கு!
வெறும் வார்த்தை கொண்டொரு கவிதை புனைய ஆசை!
வந்தமரும் வார்த்தைகளை தணிக்கை செய்யாமல்!
புதுக்கவிதை என விதிகளை
வீதியில் கொளுத்தியபின்
அழகாய் நான்கு வார்த்தைகளை
அடுக்கி வைத்தாலும்
கவிதை தானே?
இல்லை என எவர் சொன்னாலும்
ஆம் என நான் சொல்லுவது
மாறவா போகிறது??!!