தமிழ் சினிமா உலகம் தலையில் வைத்து கொண்டாடிய படம். கண்டிப்பான தமிழ் வாத்தியாராக குற்றம் கண்டு பிடிக்கும் இணையவாழ் தமிழ் விமர்சகர்களும் தாராளமாய் பாரட்டிய படம் இந்த வழக்கு எண் 18/19. செமஸ்ட்டர் தேர்வு மற்றும் இன்ன பல காரணங்களால் படம் வெளிவந்து இரண்டு வாரம் கழித்து இன்றுதான் தேடி பிடித்து பார்த்தேன். இரண்டு வாரம் கழித்தும் அரங்கில் மதிக்கதக்க கூட்டம் இருந்ததே படத்தின் வெற்றிக்கு சான்று.

சென்னையின் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒன்றிலும் அதனை சுற்றியும் வாழும் சில மனிதரின் வாழ்வில் நடக்கும் சில சம்பவங்களின் தொகுப்பே படம்.  ஓபனிங் ஷாடில் மருத்துவமனைக்கு விரையும் ஆம்புலன்ஸ், அங்கு மருத்துவர்கள் சிகிச்சை தொடங்க விசாரனையை தொடங்குகிறார் இண்ஸ்பெக்ட்டராக வரும் முத்துராமன். பாதிக்கபட்டவரின் தாய் தரும் வாக்குமூலம் கொண்டு குடியிருப்பின் அருகில் தள்ளுவண்டி கடையில் வேலைசெய்யும் ஸ்ரீயை விசாரிக்க பிளாஷ்பேக்கில் அவரது கதை விரிகிறது.  அடுத்து மனீஷா யாதவ் இண்ஸ்பெக்ட்டரை சந்திக்க வந்து வாலண்டியராக வாக்குமூலம் தருகிறார். அவரது பிளாஷ்பேக்கில் மற்றோரு கதை. இரண்டையும் சேர்த்து பார்க்கையில் மனிஷாவின் வீட்டில் வேலை செய்யும் ஊர்மிளாவை ஸ்ரீ ஒருதலையாய் காதலிப்பதும், யாரோ ஊர்மிளா முகத்தில்  அமிலம் வீசியதும் தெளிவாகின்றன. இடையே மனிஷாவிடம் கடலை போட்டு அவள்பின் சுற்றும் மிதுன். இந்த நால்வர்தான் கதையின் அடிப்படை கதாபாத்திரங்கள். விசாரனையில் மிதுன்தான் உண்மை குற்றவாளியென முத்துராமன் கண்டு பிடித்தாலும்,மிதுனின் தாய் தரும் பணத்திற்காக ஸ்ரீ மீது வழக்கை ஜோடித்து, நீ இந்த குற்றத்தை ஒப்புகொண்டால் ஊர்மிளாவின் மருத்துவ செலவை அவர்கள் ஏற்றுகொள்வார்கள் என கூறி ஸ்ரீயை சமதிக்க வைக்கிறார். பொய் சொல்லி அறியாத ஸ்ரீ தனது காதலிக்காக பொய் கூறும் இடமே கிளைமேக்ஸ் என நினைக்க தொடர்ந்து நீளுகிறது படம். இந்த உண்மை அனைத்தும் ஸ்ரீயின் நண்பன் மூலம் ஊர்மிளாக்கு தெரியவர அவளுக்கும் ஸ்ரீ மீது காதல் பிறக்கிறது. ஸ்ரீக்கு நடந்த அநியாயத்தை எதிர்த்து ஊர்மிளா எடுத்த முடிவு அதிர வைக்கும் கிளைமேக்ஸ்.
ஒரு திரைபடத்தை பார்த்த உணார்வை தராமல் நம்மை சுற்றி நடக்கும் விஷயத்தை பார்த்த உணர்வே வெளியே வரும்பொழுது. வளவள என நீளாத சிறிய திரைகதை மிக பெரிய +.  மிகை படுத்தபடாத ஆனால் அரங்கம் ரசிக்கும் வசனங்கள் பல. “..ஒரு நாள் கூத்துன்னு சொல்லுவாங்களே..” ஒரு சோற்று பதம்.  திரைகதையிலும் பல நுணுக்கங்கள். ஸ்ரீயிடம் பணம் வாங்க தயங்கும் ரோசியின் கைகள், வாங்கியபின் கிளாசை மிதிக்கும் அவள் கால்கள், ஸ்ரீயிடம் முத்துராமன் கடைசியாக சொல்லும் வரிகள் கந்துவட்டி கடன் அடைக்க செல்கையில் அவனிடம் சொல்ல பட்ட அதே வரிகள். புதுவிதமான முறையில் படமாக்க பட்டவிதம் பல இடங்களில் கதாபாத்திரங்களுடனே பயனிக்க வைத்தாலும் சில இடங்களில் (அதிக குளோஸப் காட்சிகளில்) கடுப்பேத்துகிறது. துணை நடிகர்களின் நடிப்பு சொல்லி கொள்ளும் அளவிற்கு சிறப்பாக இல்லை ஆனால் குறையும் இல்லை. பின்னனி இசை பாட்டிற்கு மட்டும்தான் கிடையாதா அல்ல முழு படத்திற்கும் கிடையாதா என்ற சந்தேகம் தீரவில்லை இன்னும் எனக்கு.
முத்துராமன் நடித்ததாகவே தெரியவில்லை எனக்கு. படம் முழுக்க ஒரு இன்ஸ்பெக்கடராகவே இருந்துவிட்டு போய் இருக்கிறார்(!) உணார்ச்சிகள் எதையுமே வெளிகாட்டாத அவர்முகம் அந்த காதாபாத்திரத்திரத்திற்கு வலு சேர்க்கிறது.ஸ்ரீயின் நடிப்பு யாதார்த்தம். மிதுன் பாசிட்டிவ் கதாபாத்திரமாக அமைந்திருந்தால் அடுத்த மேடியாகியிருப்பது திண்ணம், அத்தனை ஸ்மார்ட். ஹையர் கிளாசின் அலட்சியத்தையும் டீன் ஏஜின் துடுக்கையும் அட்டகாசமாய் வெளிபடுத்தி இருக்கார்.  மிடில் கிளாஸ் பெண்ணாக மனிஷாவின் அத்தனை எக்ஸ்பிரஷன்சும் பொருத்தம். ஆனால் நடிப்பில் அனைவரையும் தூக்கி சாப்பிடுவது ஊர்மிளா. மிக மிக சில வசனங்ககளே வாயால் டெலிவர் செய்ய, மீதி அனைத்தும் கண்களாலேயே டெலிவர் செய்துள்ளார்.  அனைவருக்குமே இது மிக பெரிய எதிர்காலத்திற்கான அடிகல்லாக இருக்கட்டும்!
படம் கருத்து எதுவும் சொல்லவில்லையானாலும், அது சாடுவது இன்றைய இளையதலைமுறையின் கலாசாரத்தையே. கூறபட்டிருக்கும் விஷயம் எங்கோ ஓரிடத்தில் நடப்பதில்லை என்பதை என் போல் இளைஞர்கள் அறிவர். இளம் யுவதிகளுக்கு தகுந்தபாடம் என்றாலும் இளைஞர்களும் கற்றுகொள்ள வேண்டியது நிறைய.இது அனைத்தையும் தாண்டி  இந்த திரைப்படத்தின் மூலம் அமிலம் வீசபட்டுள்ளது இன்றைய உழைக்கும் பெற்றோரின் முகங்களிலேயே, பணத்திற்காக ஓடி உழைத்து பிள்ளைகளுடன் நேரம் செலவிட முடியாமல் பணம் செலவிடும் பெற்றோர் தங்கள் பிள்ளையும் இந்த நிலமைக்கு ஆள் ஆகலாம் என்பதை நினைவில் கொள்க.
படத்தின் மிக பெரிய குறையை குறிப்பிடும் முன் என்னுள் எழுந்த சில கேள்விகள்:
1) சைக்கிள் டூ வீலர் இல்லையா?? #எனக்கு தெரிஞ்சி அதுக்கும் இரண்டு சக்கரம் தான்
2)ஸ்ரீயின் கனவில் வரும் காட்சியில் ஊர்மிளா படிக்கும் புத்தகங்கள் எப்படி???
இதை தாண்டி படத்தின் மிக பெரிய முரண்: மனிஷாவின் கதாபாத்திரம். பின் பாதியில் காட்டியதுபோல் சாமர்த்தியசாலி, தீர்க்கமான முடிவெடுக்ககூடியவளாயின் (மிதுனிடம் பொய் காரணம் கூறி அவனுடனே வீடு வந்து சேர்வது, போலிஸிடம் தானாக சென்று உண்மையை கூறுவது) முன் பாதியில் கதவை தட்டும் எவனையோ வீட்டினுள் அணுமதிப்பது ஏன்??
முழு படத்தின் தாக்கத்தையும் வெளிகொணரும் அந்த கடைசி காட்சி படமாக்கப்பட்ட விதத்தில்  முதிர்ச்சியின்மை. கண்ணீர் வர செய்யும் ஊர்மிளாவின் நடிப்பு வீணாக்கப்பட்டுள்ளது வருத்தம். கொஞ்சம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அல்லது எதாவது தொழில்நுட்பம் உபயோகித்து ஊர்மிளாவின் முகத்தை ரியலிஸ்ட்டிக்காக காட்டிருந்தால் வீடு வரும் வரையாவது மனதை அரித்து கொண்டிருந்திருப்பாள்.
ஒரு உண்மை செய்தியை எடுத்து அதை சுற்றி ஒரு கதை புனைந்து, அலுக்காத திரைகதையின் மூலம் மக்களுக்கு ஒரு செய்தி சொன்ன விதத்தில் வழக்கு எண் தமிழ் சினிமாவில் முக்கியமான படைப்பு. தனிமனித ஆராதனை நடக்கும் தமிழ் சினிமாவில் யதார்த்தமாக யதார்த்தத்தை முழுதும் புது முகங்கள் கொண்டு கண்முன் நிறுத்திய பாலாஜி சக்திவேலுக்கு ராயல் சல்யூட்
    –>கட்டாயம் பார்க்க வேண்டும்<–

  •  பார்க்கலாம்
  • வெட்டியாக இருந்தால் பார்க்கலாம்
  • வெட்டியாக இருந்தாலும் பார்க்க வேண்டாம்