சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு உண்மை சம்பவம். கல்லூரி
முடிந்து பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தோம். அரசு பேருந்துகளும் கல்லூரி பேருந்துகளும் சேர்ந்து ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலையில் சிறு வாகன நெரிசலை உருவாக்கியிருந்தன. ஒரு அரசு பேருந்தின் பின் இரண்டு இருசக்கர வாகன ஓட்டிகள் காத்து கொண்டிருந்தனர். அப்பொழுது எங்கிருந்தோ வந்த ஒரு லாரி கட்டுபாடு இழந்து அந்த பேருந்து மீது மோதியதில் நடுவில் சிக்கி இருவரும்……..
ஒருவர் உடலில் எந்த காயமும் இல்லாத போதிலும் தலையில் அடிபட்டு
உதிரம் வீணாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். (தலைகவசம் அணிந்திருந்தால் அவர் பிழைத்திருக்கலாம்.) இன்னொருவர் அதிர்ஷ்டவசமாக பலத்த காயங்களோடு உயிர் தப்பினார்.
108க்கு அழைப்பது என நாங்கள் மும்முரமாக இருந்தோம். உண்டான வாகன நெரிசலால் அவசர ஊர்தி சாலையின் எதிர்பக்கம் தான் வந்தது. அவரை தூக்கிக் கொண்டு சாலையை கடந்து அவசர ஊர்தியில் ஏறி அமர்ந்தபின் ஆசுவாசமடைந்து அவரிடம் வீட்டு தொலைபேசி எண் கேட்டால் அவருக்கு நினைவில் இல்லை. சட்டை பையில் இருந்த சில காகிதங்கள் எதிலும் எந்த எண்ணும் இல்லை. அவரது அலைபேசி விபத்தின் தாக்கத்தில் எங்கோ சென்று விழுந்துள்ளது. அவரிடம் அவரது தொலைபேசி எண் வாங்கி அதற்கு அழைத்தோம். எடுத்தவர் தனது இல்லத்திற்கு சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். சரி இவரது இல்ல எண்னை (செல்வின்னு பேர் போட்டு இருக்குங்க…) தெரிவிக்குமாறு கேட்டேன்.
இதோ பார்த்து சொல்லுவதாக கூறி அழைப்பை துண்டித்தார். பல நிமிட
காத்திருப்பின் பின் திரும்ப அழைத்தால் அலைபேசி அணைத்து
வைக்கப்பட்டிருந்தது.
முயற்சிக்கவுமென வற்புறுத்தி, அவரை கூற வைத்தோம். அவர்
தோராயமாக கூறிய நான்கு ஐந்து எண்களுக்கு அழைத்துப் பார்த்தோம், அனைத்தும் தவறான அழைப்புகளாயின. பின்பு நினைவு வந்தவராக ஒருவரது எண்ணை கூறினார். அது அவரின் தம்பியின் நண்பனின் எண்ணாம். அவர் மூலம் தம்பி எண் வாங்கி விஷயம் தெரிவித்தோம்.
அவர்களது வீடு செங்கல்பட்டிலேயே இருந்ததால் நாங்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை போய் சேர்கையில் அவரது குடும்பத்தினரும் வந்து சேர்ந்திருந்தனர். நினைத்து பாருங்கள் அவருக்கு கடைசி வரை அந்த எண் நியாபகம் வராமல் இருந்திருந்தால்.?? அல்லது அதிர்ச்சியில் நினைவு தப்பி இருந்தால்.??
(வாகனத்தின் பதிவு எண் கொண்டு கண்டுபிடித்திருக்கலாம் என பல வழிகள் காவல்துறையினருக்கு இருந்தாலும்…) எங்களால் என்ன செய்திருக்க இயலும்.???
நான் கூற வரும் விஷயங்கள்:1)மொபைலில் தங்கள் உறவினர் எண்ணை உறவுமுறை சேர்த்து சேமித்து வையுங்கள்.
(ICE என சேமிக்கும் வழக்கம் பரவலாக வெளிநாட்டில் கடைபிடிக்க பட்டாலும் இந்தியாவில் அதை பற்றிய விழிப்புணர்வு வெகு குறைவே, பார்க்க http://en.wikipedia.org/wiki/In_case_of_emergency)
2)சட்டைப் பையில்/கைப்பையில் ஒரு காகிதத்தில் முக்கியமான தொலைபேசி எண்ணை எழுதி வைத்திருக்கவும்.
3)குறைந்தது ஒருவரின் எண்ணையாவது மனனம் செய்து கொள்ளவும், அவசர காலத்தில் பேப்பரில் இருக்கும் எண் கிடைக்காமல் போகலாம், மொபைல் தொலைந்து போகலாம். முக்கியமாக பெண்கள் அனைத்து உபகரணங்களையும் கைப்பையில் மட்டுமே வைப்பர், அவசரகாலத்தில் அதை தேடுவது சத்தியமல்லாதது. காணாமல்/தொலைந்து போக கூடிய வாய்ப்புகள் அதிகம்.
4)ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவத் தயங்காதீர்கள். மருத்துவமனையில் அனுமதித்தபின் அங்கிருந்த காவல் அதிகாரி, எங்களிடம் ஒரு படிவத்தை பூர்த்தி செய்யச் சொன்னார். எங்கள் விவரம் மற்றும் கையொப்பமும் பெற்றுக்கொண்டார். அவ்வளவுதான். இன்று வரை எந்த பிரச்சனையும் இல்லை. பொதுவாக கூறப்படுவது போல் அலைகழிக்கபடும் அபாயம் எதுவும் இல்லை.ஆதலினால் ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய தயங்காதீர்கள்.
5) கட்டாயம் தலைக்கவசம் அணியவும். கண்முன்னே ஒரு உயிர் கணநேரத்தில் பிரிந்தது தலைக்கவசம் அணியாத ஒரே காரணத்தால். (அவர் ஓட்டிக் கொண்டு வந்தது புத்தம் புது வண்டி என்பதை கண்டபொழுது, வாங்கி கொடுத்து வழி அனுப்பி வைத்த பெற்றோர் கண்முன் நின்றனர்)
6) கடைசியாக- முக்கியமாக விபத்தில் ஒருவர் அடிபட்டால்,
->எரிகிற வீட்டில் பிடிங்கினது லாபமென விபத்து நடந்த இடத்தில் களவாட முயற்சிக்காதீர்கள்.
->உதவி செய்ய மனமில்லாவிட்டாலும் உபத்திரவம் செய்யாதீர்கள்.
–>சுற்றி நின்று கூட்டம் கூட்டி வேடிக்கை பார்ப்பதை தவிர்க்கவும், கூட்ட நெரிச்சலால் வாகன நெரிசல் ஏற்ப்படும், உதவி ஊர்தி வந்து சேர தாமதமாகும்.
இந்தப் பதிவை படித்து, உங்கள் நண்பர்/ கணவர்/ தந்தை அல்லது உடனே உதவக்கூடிய ஒருவரின் எண்ணை தாங்கள் நினைவில் வைத்து கொண்டால் I WOULD BE HAPPY.!!
டிஸ்கி: வாசிப்பவரின் மன நிலையை பாதிக்க கூடாது என்பதற்காக விபத்தின் கோரத்தை அதிகமாக வர்ணிக்கவில்லை, ஆனால் அந்த கோரத்தின் தாக்கமே இந்த பதிவின் மூலம் உங்களை வற்புறுத்துவதன் காரணம்.
(108 அவசர ஊர்தி சேவையை பாராட்டியே ஆக வேண்டும்…முதல் அழைப்பிலேயே தேவையான விஷயங்களை கேட்டு தெளிவான தகவல் தந்தது….. 10 நிமிடங்களில் ஊர்தி வந்து சேர்ந்தது….. வாகன நெரிசலில் தாமதமாகுமென மாற்று திசையில் வாகனங்களின் எதிர் திசையில் வந்தது…வந்த மருத்துவ சிப்பந்தியின் துரித உதவி…அனுமதித்த பின் நாங்கள் அளித்த பணத்தை ஏற்க மறுத்தது என முழுதும் ஆச்சரியங்கள்!!)