அது மழை பெய்து ஓய்ந்த ஓர் இரவு. பாதாள சாக்கடைக்கு தோண்டபட்டு அவசரகதியில் மூடியும் மூடபடாத சாலை வழி வீடு திரும்பி கொண்டிருந்தேன். செம்மண் கலந்து சாலை முழுக்க சேறால் நிறைந்திருந்தது. காய்ந்தது போல் தெரிந்த இடங்களில் கால் வைத்து பள்ளியில் கூட முயற்சிக்காத நீளம் தாண்டுதல் பழகிகொண்டிருந்தேன்.
சற்று பின் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
ஒரு இடத்தில் சாலை முழுக்க மண் நிரப்பி மிக குறுகிய பாதை மட்டுமே இருந்தது. அதுவும் மழை நீர் மற்றும் சேறால் நிரம்பி இருந்தது. நீண்ட யோசனைக்கு பின் எனக்கு முன் இரண்டு வழிகள் இருப்பது புலன் ஆனது. ஒன்னு இந்த பக்கம் ஏறி போனும் இல்லனா அந்த பக்கம். ஆனா ரெண்டுமே ஈர மண், சேறு. எதில் போகலாம் என்பதை இங்கி பிங்கி பாங்கி போட்டு முடிவு செய்ய முடிவு செய்த பொழுது அந்த நபரும் அருகில் வந்து விட்டார். அவர் முதலில் போவதா, நான் முதலில் போவதா என்ற காத்திருப்பில் மேலும் 47 வினாடிகள் கடந்தன. சீனியாரிடிபடி நானே போவதென்று நானே முடிவு செய்து, இடது பக்கமாக காய்ந்திருந்ததுபோல் தோண்றிய பகுதியில் கால் வைத்து கடக்க தொடங்கினேன். முதல் அடியில் பிரச்சனை ஏதும் வரவில்லை. இரண்டாம் அடி வைக்கையில் புதைகுழிபோல் கால் உள்ளே சென்று (ஜீன்ஸ் பேண்ட்டோடு) நான் நிலை தவறி கீழே விழ போய்…முழுதாய் விழாமல் கையால் தாங்கி .. புரியும்படி சொல்லனும்னா… push-up எடுக்கும் பொஸிஷனில் கிடந்தேன். பின்னால் வந்த நபர் இதை பார்த்தார். லாவகமாக மறுபக்கம் கவனமாக கால் வைத்து கடந்து சென்றுவிடார். ஏதேதோ சேஷ்டைகள் செய்து பேண்ட் தேனீர்-சட்டை (t-shirt!!) அனைத்தும் சேறாகி எழுந்து நின்ற பொழுது மனிதர்களை பற்றி இன்னும் கொஞ்சம் புரிந்து கொண்டேன்…